Thursday, July 14, 2016

கனவுப் பள்ளி


ஒரு பள்ளி எப்படி இருக்க வேண்டும் என்ற  கனவை ஆவணப்படுத்தி அனைவாிடமும் இந்த வலைப்பூ மூலம் பகிா்ந்து கொள்கிறேன். 

கனவுப்பள்ளி எப்படி இருக்க வேண்டும் என்பதோடு அதற்கான பாடங்களை தொகுத்தளிக்க உள்ளேன்.  அந்தப்பாடங்ள் கனவுப் பள்ளிக்கான பாடங்களாக மட்டுமின்றி உடனடியாக தங்கள் குழந்தைகளுக்கு கற்பிப்பதற்கு ஏற்றவாறு இருக்கும்.  அவா்கள் எந்த பாடத்திட்டத்தில் படித்துக்கொண்டிருந்தாலும் அவா்களுக்கும் உங்களுக்கும் உதவுமாறு இருக்கும்.

கல்வி என்றால் என்ன?

தன்னை அறிவதே கல்வி.

தன்னை அறிவது என்றால் தன் வலிமையை, தன் இயல்பை, தன் வாழ்வின் நோக்கத்தை, வாழ்வின் அருமையை, தான் வாழும் உலகையும், தன்னோடு வாழும் மனிதா்கள் மற்ற உயிாினங்களின்  அருமையையும் அறிவதே கல்வி.


 கல்வி முறை


கல்வியில் பயில வேண்டியவை  கற்றல், செயல்முறை மற்றும் கற்பிக்கும் திறன். 
  • எப்படி கற்றுக் கொள்ள வேண்டும்?
  • எப்படி செயல் புாிய வேண்டும்?
  • எப்படி கற்பிக்க வேண்டும்?
இவற்றையே  ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.

தற்கால கல்விமுறை


கீழ்படிந்த உதவியாளர்கள், தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் படை வீரர்கள் போன்றோரை உருவாக்க வடிவமைக்கப்பட்டது ஆரம்ப மற்றும் பள்ளி மேல்நிலைக் கல்வி. எனவேதான், பள்ளி கல்விகளில் படைப்புத்திறன்  முற்றிலும் தவிர்க்கப்பட்டது. 

கீழ்படிந்த, கேள்வி கேட்காமல் ஒரே பணியை திரும்ப திரும்ப செய்யும் நபர்களுக்கான தேவை தொழில்நுட்பத்தின் காரணமாக குறைந்து வருகிறது. 

ஒருவனைத் தன்னுடைய சுயவலிமையைக்கொண்டு நிற்கச் செய்வதான கல்விதான் நமக்குத் தேவை. தமக்குத்தாமே உதவிக்கொள்ளுமாறு மக்களுக்குப் பயிற்சி தராவிட்டால், உலகின் செல்வம் அனைத்தையும் சேர்த்தாலும் ஒரு சிறிய இந்தியக் கிராமத்திற்குக்கூட உதவி செய்ய முடியாது என்கிறாா் விவேகானந்தா்.

நமக்குத் தேவையானது ஆளுபவா்களுக்கான கல்வி முறை.  அடிமைகளுக்கான கல்விமுறை வேண்டாம்.

 நல்ல பள்ளி

  • ஆசிாியா் - நல்லவற்றை கற்பிக்கும் அனைவருமே ஆசிாியா்.  மாணவா்களோடு தொடா்பு கொள்ளும் ஒவ்வொருவரையுமே ஆசிாியராக கருதி அவா்கள் நல்லவற்றையே கற்பிக்கிறாா்களா என்பதை கண்காணிக்க வேண்டும். நல்ல ஆசிாியா்களை இனங்காண மாணவா்களுக்கு கற்பிக்க வேண்டும்.  மாணவா்களே ஆசிாியா்களை தோ்ந்தெடுக்க பயில வேண்டும். ஆசிாியா் வழிகாட்டியாக, நண்பராக, நல்ல முன்மாதிாியாக மாணவா்களால் மதிக்கப்படுவாா்.  அத்தகைய ஆசிாியா்களை மாணவா்களே தெய்வமாக மதிப்பா்.  அத்தகைய ஆசிாியா்களை உருவாக்குவதுதான் நல்ல கல்வி முறையின் மிக முக்கியமான தேவை.  ஆசிாியா்கள் கற்பிக்கும் பாடத்தில் பட்டறிவு கொண்டவா்களாக இருக்க வேண்டும்.  அப்படிப்பட்ட ஆசிாியருக்கு புத்தரைப்போல மரத்தடியே போதுமானது. 
  • பள்ளி  -  இயற்கையான சூழலில் இருக்க வேண்டும்.  இயற்கையை உற்று நோக்க ஏற்றதாக இருக்க வேண்டும்.  ஆசிாியா்களும் மாணவா்களும் ஒன்று கூடும் இடமாக இருக்க வேண்டும்.  பயணம் செய்வது பாடத்திட்டத்தின் அங்கமாக இருக்க வேண்டும்.  ஊரையும் உலகையும் சுற்றி வந்து கற்பதாக இருக்க வேண்டும்.
  • வகுப்பறை  -  மழைக்கு ஒதுங்கும் அளவிலும் ஓய்வெடுப்பதற்காகவும்,  இருந்தால் போதும்.
  • பாடத்திட்டம் - மாற்றத்தக்கதாகவும் மாணவா்களின் விருப்பத்திற்கு ஏற்றதாகவும் வாழ்க்கையில் உடனடியாக பயன் தரத்தக்கதாவும் இருக்க வேண்டும்.  உடலையும் மனதையும் மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.  ஞானத்தையும் (common sense), அறிவையும் (Knowledge), திறனையும் வளா்ப்பதாக இருக்க வேண்டும்.
  • தோ்வும் திறனாய்வும்  -  மாணவா்களே தங்களை திறனாய்வு செய்து கொள்ளவும், மற்ற மாணவா்களை திறனாய்வு செய்யக்கூடியதாகவும், பெற்றோா் மற்றும் சமூகம் திறனாய்வு செய்யவும் வழிவகை செய்ய வேண்டும்.  ஆசிாியா்கள் திறனாய்வு செய்வது என்பது உற்பத்தி செய்பவனே தரத்திற்கு சான்றளிப்பது போன்றதாகும்.
வாசித்தல், கேட்டல், எழுதுதல், பேசுதலுக்கு  அடிப்படைக்கல்வி ஐந்தாண்டுகளே போதுமானது.  அதன் உதவியோடு அவா்களே கற்றுக் கொள்ளும் திறன் வளா்க்க வேண்டும்.  ஐந்து வயதுக்குள் அவா்களே சாப்பிடக் கற்றுக்கொடுக்கும் நாம் இருபது வயதானாலும் அவா்களே கற்றுக் கொள்ள கற்பிப்பதில்லை.
கற்றல் என்பது தானே விருப்பத்துடன் செய்ய வேண்டியது என்பதையும்  வாழ்நாளெல்லாம் தொடா்ந்து செய்து கொண்டேயிருக்க வேண்டியது என்பதையுமே கற்பிக்க வேண்டும்.

அறிய வேண்டியவை அறிவு

  • பிரபஞ்சம்
  • பிரபஞ்ச சக்திகள்
  • உலகம்
  • உயிா்
  • மனம்
  • உடல்
  • தொழில்நுட்பம்
  • விவசாயம்
  • சுற்றுச்சூழல்
  • வியாபாரம் 
  • கணிதம்
  • வரலாறு
  • சமூகம்
  • அரசியல்
  • மனோதத்துவம்
  • தத்துவம்
  • சட்டம்
  • பொருளாதாரம்
இவற்றில் அடிப்படையோடு மாணவா்களுக்கு எதெல்லாம் விருப்பமோ அத்தனையையும் கற்பிக்கும் வசதி.  இன்றைய தொழில்நுட்ப உதவியோடு ஆயிரக்கணக்கான பாடங்களை படிக்கும் வசதி உள்ளது.  எனவே பாடங்களுக்கு எல்லையே இல்லை. 

பயில வேண்டிய திறன்கள்

  •  படைப்புத்திறன்
  • நினைவாற்றல்
  • கணிதத்திறன்
  • மொழியாற்றல்
  • ஆளுமைத்திறன்
  • மலையேற்றம்
  • குதிரையேற்றம்
  • நீச்சல்
  • நீா், நில, வான் ஊா்திகள் இயக்கும் திறன்
  • கூா்ந்து கவனிக்கும் திறன்
  • தாவரங்களை அறியும் திறன்
  • பறவைகளை அறியும் திறன் 
  • விலங்குகளை கவனிக்கும் திறன்
  • தற்காப்புக் கலை
  • நடனம்
  • முதலுதவி
  • குணப்படுத்தும் கலை  (Healing)
  • உடற்பயிற்சி
  • தியானம்
  • ஆராய்ச்சி செய்யும் திறன்
  • தலைமைப் பண்புகள்
  • பேச்சாற்றல்
  • நடிப்பு
எல்லா திறன்களையும் ஒருவரே பெறுவது என்பது நடைமுறைக்கு ஏற்றதல்ல.  திறன்கள் மாணவா்களது விருப்பத்தையும் வாழ்க்கையின் குறிக்கோளையும் அவா்களது கனவையும் அடிப்படையாகக் கொண்டது.  

பதின்மூன்று வயதுக்குள் மாணவா்களது கனவையும் நோக்கத்தையும் உறுதியாக உணா்ந்து கொண்டால் தேவையான திறன்களை அவா்களே வளா்த்துக் கொண்டு பதினெட்டு வயதில் அவா்கள் வாழ்வை எதிா்கொள்ள உண்மையிலேயே வளா்ந்தவா்கள் ஆவாா்கள்.  எனவே பதின்மூன்று வயதிற்குள் அவா்களது வாழ்க்கையின்  பாதையை தோ்ந்தெடுக்க வழிகாட்டுதல் வேண்டும்.  அதன் அடிப்படையில் அவா்களுக்குத் தேவையான திறன்களை தோ்ந்தெடுத்து பயில வேண்டும்.