Tuesday, August 9, 2016

சிறுநீரக நலன்

மாதுளம் பழம் (pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாறுடன் சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம் (Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம் (water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திறன் உள்ளதாம்.

ஆப்பிள் (Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொட்டாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

கரும்பு கரும்பின் நன்மைகளிலேயே முக்கியமான ஒன்று என்றால் அது சிறுநீரக கற்களை குணமாக்குவது தான்.


source:  http://thamil.co.uk/?p=678

Thursday, August 4, 2016

முடக்கறுத்தான் கீரை

சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவலியுங் கண்மலமும் – சாலக்
கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி”  – சித்தர் பாடல்

கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.


முடக்கற்றான் இரசம்


ஒரு கை பிடியளவு முடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளரளவு தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம் வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு, சீரகம் சேர்த்து இரசம் தயாரிக்க வேண்டும்.

முடக்கத்தான் தோசை

 
தேவையான பொருட்கள்
 
புழுங்கல் அரிசி – 1 கப்
முடக்கத்தான் இலை – 2 கப்
வெந்தயம் – 1 தேக்கரண்டி

செய்முறை
 
அரிசியையும், வெந்தயத்தையும் ஊற வைத்து தோசை மாவுக்கு அரைப்பது போலவே அரைத்து, அதனுடன் முடக்கத்தான் இலையையும் நன்கு கழுவிப் போட்டு அரைத்து விடவும். மூன்றையும் ஒன்றாகவே போட்டு அரைக்கலாம். மிகவும் நைசாக முதல் நாள் இரவே அரைத்து வைத்து விடவும். மறுநாள் தோசைக்கல்லில் தோசை போல வார்க்கவும். இதற்கு தேங்காய் சட்னி, பூண்டுச் சட்னி இரண்டுமே நன்றாக இருக்கும்.


 முடக்கத்தான் கீரை இட்லி


தேவையானவை:
 
இட்லி அரிசி – 3 கப், முழு உளுந்து – அரை கப், வெந்தயம் – ஒரு கைப்பிடி, முடக்கத்தான் கீரை (ஆய்ந்தது) – 2 கப், வாழை இலை – 1, நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு.

செய்முறை:
 
அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் தனித்தனியே ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் முதலில் வெந்தயத்தைப் போட்டு சுமார் ஐந்து நிமிடங்கள் அரைத்து, முடக்கத்தான் கீரையைச் சேர்க்கவும். பிறகு உளுந்து, அரிசியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்த மாவில் உப்பு சேர்த்துக் கரைத்து–வைத்த ஆறு மணி நேரத்தில் மாவு பொங்கி இருக்கும். இடலைத் தட்டு அல்லது இட்லித் தட்டில் வாழை இலையை வைத்து, சிறிது நல்லெண்ணெய் தடவி மாவை அகலமாக கொஞ்சம் தடிப்பாக ஊற்றவும். இடலைத் தட்டை மூடிவைத்து ஆவியில் வேகவிடவும். 10 நிமிடங்களில் வாழை இலை மணத்துடன்… சுடச்சுட சுவையான, சத்தான முடக்கத்தான் இடலை இட்லி தயார்.

 

 முடக்கத்தான் கீரை மருத்துவம்

முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காய்ச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நீங்கும்.

இதன் இலையை இடித்துப் பிழிந்துஎடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டுவர காதுவலி, காதில் இருந்து சீழ் வடிவது முதலியவை நீங்கும்.

முடக்கற்றான் இலையையும், வேரையும் குடிநீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்திவர நாள்பட்ட இருமல் குணமாகும்.
சில பெண்களுக்கு மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்படாது. இவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாதவிலக்கு ஒழுங்காக வரும்.

முடக்கற்றான் இலையை உலர்த்தி எடுத்த பொடியுடன், சித்திரமூல வேர்பட்டை, கரிய போளம் இவைகளையும் பொடி செய்து குறிப்பிட்ட அளவு மூன்று நாள் அருந்தி வர மாதவிலக்கு ஒழுங்காக வரும்.

முடக்கற்றான் கொடி மல மிளக்கி செய்கை உடையது. இதன் கொடியை முறைப்படி குடிநீரிட்டு அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து அருந்த மலத்தைக் கழிக்கச் செய்யும்.

முடக்கற்றான் வேரை உலர்த்தி பின்னர் முறைப்படி குடிநீர் அருந்திவர நாள்பட்ட மூலநோய் குணமாகும்.

முடக்கத்தான் கீரை 61 கலோரி வெப்ப ஆற்றலைக் கொடுக்கிறது. இதன் இலைகளை சிறிது எடுத்து துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வர, கை, கால் வலி, மூட்டுவலி தீரும். நரம்பு சம்பந்தமான நோய்கள் தீரும். தசை நாரும் நரம்பும் வலுப்பெறும்.

கைப்பிடியளவு முடக்கத்தான் கீரையை பொடியாக நறுக்கி, அரைத்த புழுங்கல் அரிசி மாவுடன் சேர்த்து, உப்பு தேவையான அளவு சேர்த்து, அடையாக சுட்டு காலை, மாலை இரண்டு அடை வீதம் சாப்பிட்டு வர உடல் வலி நீங்கும்.

இதன் இலைகளை மூன்று விரல் அளவு எடுத்து, மிளகு ரச மசாலுடன் தட்டிப் போட்டு ரசம் செய்து சாப்பிட்டு வர கீல்வாதம், மூட்டுப் பிடிப்பு, இடுப்புப் பிடிப்பு போன்ற நோய்கள் தீரும். மலச்சிக்கல் தீரும். வாய்வு சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.

இதன் இலைகள் நான்கு விரல் அளவு எடுத்து, வெங்காயம் சிறிது கூடுதலாக நறுக்கிப்போட்டு, மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து எண்ணெயில் பொரித்து சில நாட்கள் சாப்பிட்டு வர கழுத்துவலி, இடுப்பு வலி, முடக்குவாதம் போன்ற நோய்கள் தீரும்.

இதன் இலைகளை அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து காலையில் சாப்பிட்டு வர, காசம், சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற நோய்கள் தீரும்.

இதன் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து, அதனுடன் கருப்பட்டி சேர்த்து உண்டுவர குடலிறக்க நோய் தீரும்.

இதர கீரைகளை சமைப்பது போலவே முடக்கற்றான் கீரையை சாப்பிட்டு வரலாம். இலை, வேர் இவற்றை சம பாகமாக எடுத்து, இஞ்சி, மிளகு, சீரகம், தண்ணீர் சேர்த்து, கஷாயமாக, காய்ச்சி, அந்த எண்ணையை வலியுள்ள இடங்களில் பூசலாம். இதற்கு நல்லெண்ணையை பயன்படுத்தலாம்.

இந்த மூலிகை செறிந்த எண்ணைப்பூச்சு, கீல்வாத வலிகளை போக்கும். வாத வீக்கங்களுக்கு, முடக்கற்றான் தண்டு, இலைகளை, பாலுடன் அரைத்து தடவ, வீக்கங்கள் குறையும்.

முடக்கற்றானை உபயோகிப்பதால் கால்களின் ஏறி வரும் விறைப்புத் தன்மை (அதுவும் காலை நேரங்களில் ஏற்படும்) போகும். உடல் வலிகளுக்கு, இலைகளை கடலை எண்ணையில் அரைத்து, வெளிப்பூச்சாக வலிக்கும் இடங்களில் தடவலாம்.

கீல் பிடிப்பு, கீல் வாதம், கால்களை நீட்டவோ, மடக்கவோ முடியாமல் போதல், நடக்க முடியாமல் போதல், இவற்றுக்கு முடக்கற்றான் கீரையை சமைத்து சாப்பிட்டுவர நல்ல குணம் தெரியும்.

இதன் இலைகளை அரைத்து, பூண்டு, சீரகம், கருமிளகு, உப்பு, வெங்காயம் இவற்றை சேர்த்து, ரசம் போல் தயாரித்து, ஒரு நாளைக்கு இரண்டு வேளை குடிக்க, ருமாடிஸம், சுளுக்கு, மலச்சிக்கல் இவை மறையும்.

இலைகளை நெய்யில் வதக்கி, கூட இஞ்சி, கொத்தமல்லி, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சட்னி போல அல்லது துவையல் போல தினமும் சாப்பிட்டு வர மூட்டு நோய்கள் தீரும்.

இதன் இலைகள் மூன்று விரல் அளவு எடுத்து, வெல்லம் சேர்த்து நெய்விட்டு வதக்கி உண்டு வர, கண் வலி தீரும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் பல குணமாகும்.

இதன் இலைகளைப் பாலுடன் சேர்த்து அரைத்து, கொப்புளங்களுக்குத் தடவி வர குணம் கிடைக்கும்.

ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலைகளை இடித்து, ஒரு பழகின மண்பானையில் இட்டு, அரைப்படி நீர் விட்டு அரைக் கால் படியாக சுண்டக்காய்ச்சி, வடிகட்டி ஒரு வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் இரண்டுவேளை மூன்று நாள் அருந்த நரம்புகள் சம்பந்தமான மேக வாய்வு, மூச்சுப் பிடிப்பு, மூலம், கபம் சம்பந்தமான இருமல், மலச்சிக்கல் ஆகியவை தீரும்.

தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்கள் முடக்கத்தான் கீரைதோசை சாப்பிடுவார்கள். நாமும் அதைக் கடைப்பிடித்தால் நமக்கு மூட்டு வலிகள் வராது.